LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சித்தா vs ஆயுர்வேதா

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

சித்தா VS ஆயுர்வேதா

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

[1] இந்தியாவில் சித்த மருத்துவத்தின் தோற்றம் தெற்கு. ஆயுர்வேத மருத்துவத்தின் தோற்றம் வடக்கு.

[2] சைவமான சித்த மருத்துவ நூற்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. வேதமான ஆயுர்வேத மருத்துவ நூற்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.

[3] சித்த மருத்துவம் தமிழர் வாழ்வியல் முறைப்படி தோன்றி குரு வழி-வழியாக வளர்ந்து வந்த மருத்துவமாகும். ஆயுர்வேத மருத்துவம் ஆரிய வழக்கப்படி வகுக்கப்பட்ட வைத்திய வேத சாஸ்திரமாகும்.

[4] சித்த மருத்துவத்தின் தந்தை அகத்தியர். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி.

[5] சித்த மருத்துவம் முதல் சித்தனனான சிவனிடமிருந்து தோன்றியதாக மருத்துவ நூற்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரோ “ஆதிக்கும் பகவனுக்கும் முந்தியவன் மூலன் அவனே சிவன் எனும் சித்தனே” என குறிப்பிடுகிறார். ஆயுர்வேத மருத்துவம் பிரம்மன் வாயிலாக பிறந்தது என குறிப்பிடுகிறது.

[6] சித்த மருத்துவத்தில் 18 சித்தர்கள். ஆதி குருவாக வழங்கப்படுகிறார்கள். இவற்றில் முதன்மையானவர் அகத்தியர். ஆயுர்வேத மருத்துவத்தில் தன்வந்திரி வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் ஆதிகுருவாக வணங்கப்படுகின்றனர்.

[7] சித்த மருத்துவத்தில் மூலன் வழியிலிருந்து சிவனும், மயனும், மாயனும் தோன்றினர். இவர்களுடன் 7வகை குருபீடங்களும் சேருகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் பிரம்மன், தக்கன், அஸ்வினி, இந்திரன் ஆகியோர் ஆதிதேவர்களான வணங்கப்படுகின்றனர்.

[8] சித்த மருத்துவம் அகத்தியரை 18 சித்தர்களில் ஒருவராக குறிப்பிடுகிறது. சிவனிடம் இருந்து பார்வதி, பார்வதியிடம் இருந்து நந்தி, நந்தியிடமிருந்து அகத்தியர் சித்த மருத்துவ அறிவை பெற்றதாக சித்த மருத்து வரலாறுவ குறிப்பிடுகிறது. ஆயுர்வேத மருத்துவம் தன்வந்திரியை கடவுளாக குறிப்பிடுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் காசி அரசன் மகன் தனது வைத்திய புலமையால் தன்வந்திரி பட்டம் பெற்றார் என சில நூற்கள் குறிப்பிடுகின்றது.

[9] சித்த மருத்துவ கூற்றுப்படி ஏழுவகை பிறப்பு கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் நான்கு வகை பிறப்பு மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

[10] சித்த மருத்துவத்தில் சிவன் வழியே திருமூலர், பதஞ்சலி, சுந்தரானந்தர், கருவூரார், நந்தீசர், இடைக்காடர், மயன் மாயன் வழியே தன்வந்திரி, சட்டைமுனி, கொங்கணவர், பாம்பாட்டி, ராமதேவர், வான்மீகி, ஆதிதேவனின் வழியே அகத்தியர், மச்சமுனி, கோரக்கர், போகர், குதம்பை, கமலமுனி ஆகியோர் தோன்றினர். அறுவை சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருந்துகளின் குணம் பற்றி அகத்தியர் மற்றும் தேரையரும், நோய் கணிப்பு பற்றி யூகி முனிவரும், ஜோதிடத்தைப் பற்றி கோரக்கரும் புலிப்பாணியும், யோகத்தைப் பற்றி திருமூலரும், முப்பு சூத்திரம் பற்றி கொங்கணவர் ராமதேவர் இடைக்காடர் ஆகியோரும், ரசவாதத்தை பற்றி கருவூராரும், உலோக மருந்துகளைப் பற்றி போகரும் மிகச் சிறப்பாக குறிப்பிட்டுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்தில் தன்வந்திரியின் கீழ் சுசுருதர், வசிஷ்டரின் கீழ் காசிபர், பிருகு முனிவர், பரத்வாசரின் கீழ் அக்னிவேசர், புனர்வசு, சரகர், ஆத்ரேயர், ஆசையபர் ஆகியோர்கள் தோன்றி சம்ஹிதைகள் இயற்றப்பட்டன.

[11] சித்த மருத்துவத்தின் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு அங்கங்களின் கீழ் ரச கந்தகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட மருந்து செய் முறைகள் பல்வேறு நூல்களின் தொகுப்பான வைத்திய பெருநூல் காவியம் இவற்றில் ஏழு லட்சம் மருந்து சூத்திரங்களும், அதன் பிரிவாக 12 காண்டங்கள் கொண்ட வைத்திய-வாத-யோக-ஞான என்ற நூற்களும், தோன்றின. மருந்துகளை பற்றியும், நோயை பற்றியும் வசிஷ்டரும், பிள்ளை பேறு, குழந்தை வைத்தியத்தை பற்றி ஆசியபர், ஆரபாணியும், விரண அறுவை சிகிச்சை பற்றி தன்வந்திரி, சுசுருதர், ஜாதுகர்ணரும், அதனை தொடர்ந்து சாரங்கரசம்ஹிதை, விதேக தந்திர நிமாதந்தினி, சாளக்கிய தந்திரம், சாலிகோத்ர சங்கிதம், வாலகப்யா சம்ஹிதம், விருட்சஆயுள்வேதம் ஆகிய நூல்கள் எழுதப்பட்டன.

[12] துறைகளின் அடிப்படையில் சித்த மருத்துவம் 18 துறைகளாக இயங்குகிறது என சிவஞான யோகி குறிப்பிடுகிறார். இதையே பதிணென் சித்தர் மருத்துவம் என்று வழங்கலாயிற்று. கர்ப்ப தோற்றவியல், உடல்செயலியல், உடற்கூறியல், முத்தாதியல், எண்வகைதேர்வியல், ஏழுதாதியல், சுவையியல், கழிவுபொருளியல், நோய்முதல்மருந்தியல், மருந்தின் குணவியல், புண்ணியல், விடவைத்தியவியல், ஆயள்வளரியல், பாலவாகடவியல், தூய்மையியல், யோகவியல், தொற்றுநோயியல் மற்றும் மருந்தியல் என 18 வகையான அங்கங்களை சித்த மருத்துவம் கொண்டுள்ளது. இவையெல்லாம் மணி, மந்திரம், அவிழ்தம் என்ற மூன்றில் அடங்கும். ஆயுர்வேத மருத்துவம் சரகரின் கூற்றுப்படி 8 அங்கங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. சூத்திர ஸ்தானம் என்ற ஆயுர்வேத வரலாறு நிதான ஸ்தானம் என்ற குன்மம் போன்ற நோய்கள், விமான ஸ்தானம் என்ற குற்றங்கள், தோடங்கள், சரீர ஸ்தானம் என்ற உடல் உறுப்பு பற்றிய விளக்கங்கள், இந்திரியா ஸ்தானம் என்ற மானேந்திரியங்கள், நோய்குறிகள் பற்றிய ஆய்வு, சிகசாஸ்தானம் என்ற ரசாயனம், தோல்நோய்கள், யூனிநோய்கள் பற்றி அறிதல், கல்ப ஸ்தானம் என்ற காயகல்பம், ஸ்திஸ் ஸ்தானம் என்ற பஞ்சகர்ம முறைகளின்படி செய்யப்படும் சிகிச்சை முறைகள் என எட்டு அங்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

[13] "வாதமாய் படைத்து பித்த வன்னியாய் காத்து சேத்தும சீதமாய் துடைத்து" என சித்த மருத்துவத்தின் அடிப்படையில் மனிதனின் ஆயுட்காலத்தில் முதல் மூன்றில் ஒரு பங்கு காலம் வாதகாலமாகவும், இரண்டாவது பங்கு காலம் பித்தகாலமாகவும், மூன்றாவது பங்கு காலம் கபகாலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் மனிதனின் ஆயட்காலத்தில் முதல் மூன்றில் ஒரு பங்கு காலம் கபகாலமாகவும், இரண்டாவது பங்கு காலம் பித்த காலமாகவும், மூன்றாவது பங்கு காலம் வாத காலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[14] சித்த மருத்துவத்தில் அரிஸ்டம், ஆசவம் போன்றவை பற்றிய செய்முறை குறிப்புகள் அதிகம் காணப்படவில்லை. சில இடங்களில் மட்டும் பாண்டபுதையல் என மண்ணில் புதைத்து வைத்து எடுக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவமனையின் சிறப்பே அரிஷ்டம் ஆசவங்கள் தான். பல்வேறு அரிஷ்டம் ஆசவங்கள் உடனடியாக நோயினை குணமாக்கும் ஆற்றலை உடையவை.

[15] சித்த மருத்துவத்தில் ஆசவம், அரிஸ்டம், சோமபானம் பற்றிய குறிப்புகள் முழுமையாக காணப்படவில்லை. அதே போல் ஆயுர்வேதத்தில் சுண்ணம், சத்து, மணி, முப்பூ, குரு குளிகை, ரசமணி, பூநீர், அண்டக் கல், பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

[16] சித்த மருத்துவ நூற்களில் உலோகங்கள், உலோக சத்துகள், செயற்கை உலோகம், வைப்பு சரக்குகள், மிகச்சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. சரகர், சுசுருதர் நூல்களில் உலோகம், உலோக உப்புகள், சத்து ஆகியவற்றை பற்றிய குறிப்புகள், இல்லை.

[17] நா, நிறம், விழி, மொழி, ஸ்பரிசம், மூத்திரம், மலம், நாடி என்ற எண்வகை தேர்வு சித்த மருத்துவத்தில் மிக விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் நீர்க்குறி, நெய்குறி பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆயுர்வேத மருத்துவ நூற்களில் எண்வகை தேர்வு மிக குறைந்த அளவிலே குறிப்பிடப்படுகிறது. அதிலும் நெய்குறி பற்றிய குறிப்புகள் சிறிதளவே காணப்படுகின்றன.

[18] சித்த மருத்துவத்தில் நாடியை பற்றிய குறிப்புகள், திருக்குறள் காலத்திலும், கரத்தில் நாடி பார்த்தல் மற்றும் வாய்வழியாக மருந்துகளை உட்கொள்ளுதல் தொல்காப்பியத்தில் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் சரகர், சுசுருதர், வாக்பாடர், மாதவகாரர் போன்ற ஆயுர்வேத வல்லுநர்கள் எழுதிய நூற்களில் கரத்தில் நாடி பிடித்து பார்த்து நோய் கணிக்கும் முறை குறிப்பிடபடவில்லை. 13ம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் சாரங்கதாரன், நாடி பார்க்கும் விதத்தை ஆயுர்வேத நூற்களில் குறிப்பிடுகிறார். இதற்கு பல்வேறு தமிழ் மருத்துவ நூற்களை உதாரணமாக காட்டுகிறார்.

[19] தமிழ் மருத்தவ நூற்களில் ஏராளமான ரசம், பூரம், வீரம், லிங்கம், ரசச்செந்தூரம் போன்ற பஞ்சசூதம் சார்ந்த மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்திலும் ரசம் மற்றும் உலோகம் மருந்துகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதற்கான குறிப்புகளை தமிழ் மருத்துவ நூற்களில் இருந்து சித்த நாகார்ஜுனர், ஆதிமன் நித்தயநாதன், சந்திரசேகரன், சோமதேவர், கோவிந்தன் ஆகியோர் தமிழ் நூற்களை கொண்டு எழுதியதாக குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ரசரத்தின சமுச்சம் என்ற நூலும், தமிழ் மருத்துவ நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

[20] சித்த மருத்துவத்தில் மூலிகை பொடிகளை குடிநீராக குடிக்கும் முறை பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் வடிகட்டி குடிக்கும் குடிநீர் மட்டுமே சிறப்பான முறையில் பயன்படுகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை பொடிகளை நீரில் போட்டு காய்ச்சி மிகச் சிறப்பான கசாயமாக மாற்றும் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலான ஆயுர்வேத கசாயங்கள் சிறப்பான பலனை அளிக்கின்றன. அதிலும் தோல் நோய்களுக்கு ஆயுர்வேத கசாயங்கள் கூடுதல் பலனை தருகின்றன.

[21] சித்த மருத்துவத்தில் சாறு அல்லது குடிநீரை சுண்ட வைத்து தயார் செய்யப்படும் சுரசம் என்ற மருந்தும், மூலிகை பொடிகளை கசாயம் விட்டு அரைத்து செய்யப்படும் மாத்திரைகளும் சிறப்பானவை. அதேபோல் ஆயுர்வேத மருத்துவத்தில் குடிநீரை சுண்ட வைத்து உருட்டி எடுக்கப்படும் குடிகா மருந்துகளும், வடிகட்டிய குடிநீரை காய வைத்து உருட்டி எடுக்கும் வடிகா மருந்துகளும் பிரபலமானவை.

[22] சித்த மருத்துவத்தில் இலக்கியங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுத்த முறையும், பிற்கால நூலான அகத்தியர் குணவாகடத்தில் பிரசவ முறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை காலத்தால் பிற்பட்டவையாக கருதப்படுகின்றன. ஆனால் ஆயுர்வேத நூற்களில் பிரசவம் பார்க்கும் முறை மற்றும் பல்வேறு சிகிச்சை முறைகள், கர்ப்ப காலத்தில் பிரசவத்தை எளிதாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சில அறுவை சிகிச்சை முறைகளும் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.

[23] சித்த மருத்துவத்தில் 96 கண்ணோய்களும், கூடுதலாக 24 கண்ணோய்களும் என ஏறத்தாழ 120 கண்ணோய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் 74 கண்ணோய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

[24] சித்த மருத்துவம் மனித உடலை 10-வகையாக மனித உடலை பிரிக்கிறது. வாதம், பித்தம், கபம், வாதபித்தம், வாதகபம், பித்தவாதம், பித்தகபம், கபவாதம், கபபித்தம் மற்றும் முக்குற்றம் என்ற 10வகை உடலினரை பற்றியும் அவர்களுடைய குணங்கள் பற்றியும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆயுர்வேதா வாதா, பித்தா, கபா, வாதபித்தா, பித்தகபா, வாதகபா மற்றும் திரிதோஷா என 7-வகையாக மனித உடலை பிரிக்கிறது.

[25] சித்த மருத்துவம் 18 துறையாக பிரிக்கப்பட்டு, ஆனால் அதற்கான நூற்கள் முழுமையாக வடிவமைக்கப்படாமல் ஒழங்கற்று காணப்படுகிறது. சில துறைகளுக்கு நூற்கள் கிடைப்பது சித்த மருத்துவத்தில் அரிதாக உள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் 8 பிரிவுகள் காயசிகிச்சை, பாலசிகிச்சை, கிரகசிகிச்சை, ஊர்த்துவாங்க சிகிச்சை, சாலயசிகிச்சை, டாம்ஸ்ட்ர சிகிச்சை, ஜாரசிகிச்சை என 8 வகையான மருத்துவ முறைகளும், அதற்கு மருத்துவ நூல் தொகுப்புகளும், சிறப்பான முறையில் காலத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

[26] உடலில் தோன்றும் நோய்கள் மொத்தம் 4448 என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ அனைத்து நோய்களுக்கும் உட்பிரிவுகள், சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டு காணப்படுகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களின் மொத்த எண்ணிக்கை குறிப்பிடவில்லை என்றாலும், அதன் உட்பிரிவுகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.

[27] சித்த மருத்துவத்தில் 8000 (வர்மவிழிசை) அல்லது 828 (வர்ம சிந்தாமணி) அல்லது 251 (கும்பமுனி நரம்பாறை) என ஏராளமான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்மப்புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம், நக்குவர்மம், தடவுவர்மம், அடங்கல், இளக்கல், வர்மக்கஞ்சி, வர்மஎழுப்பு. வர்மகுச்சி, வர்மத்தில் அடிபட்டவர்களை எழுப்புவதற்கு வர்மத்தண்ணீர், வர்மகசாயம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தில் மர்மம் என்ற மர்ம புள்ளிகள் 107 (சுசுருத சம்ஹிதை) என குறைந்த அளவு மர்ம புள்ளிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. தடவல், இளக்கல், அடங்கல், வர்மகஞ்சி, வர்மகசாயம் ஆகியன குறிப்பிடப்படவில்லை.

[28] சித்த உலோக மருந்துகள் மிக குறைந்த வரட்டிகளில், மிக குறைந்த புடத்திலேயே பற்பங்களாக, செந்தூரங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அதற்காக சித்த மருத்துவத்தில் செயநீர் மற்றும் திராவகங்கள் பயன்படுத்தபடுகின்றன. ஆயுர்வேத மருத்தவத்தில் 1000, 2000 என அதிகமான முறையில் மருந்துகள் புடம் போடப்படுகின்றன. செயநீர், திராவக மருந்துகளை கொண்டு உலோக மருந்துகளை வெட்டையாக்கும் குறிப்புகள் காணப்படவில்லை.

[29] சித்த மருத்துவத்தில் குருமருந்து என்ற பெயரில் பாசானகுரு, முப்பூகுரு, துருசுகுரு, கந்திகுரு ஆகிய உயர் மருந்துகள் இருக்கின்றன. இவை மிக சிக்கலான கூட்டமைப்புடன் கூடிய அல்லாய் என்று சொல்லக்கூடிய உலோக கலவைகள் மற்றும் தாவர சங்கம பொருட்கள் இணைந்தவை. இதுபோன்ற மருந்துகள் விண்ணிலிருந்து வரக்கூடிய எரிகற்களுக்கு சமமானவை என சித்தர் நூற்கள் குறிப்பிடுகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் அல்லாய் என்று சொல்லக்கூடிய உலோக கலவையில் குருமருந்துகள், ரசமணி எதுவும் இல்லை.

[30] சித்த மருத்துவத்தில் அகத்தியர், புலத்தியர், தேரையர், போகர் என வேறுவேறு வேறு சித்தர்கள் பல காட்ட காலகட்டங்களில் பல பெயர்களில் சித்தர்கள் அங்கங்கே நூற்கள் எழுதியதாக கூறப்பட்டாலும், இவர்கள் காலம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. அதுபோல் ஆயுர்வேதத்திலும் முதல் நூற்றாண்டுக்கு பின்னர் சரகர் ஆயுர்வேதத்தின் அடிப்படை மருத்துவ குறிப்புகளை எழுதியுள்ளார். 9ம் நூற்றாண்டில் அட்டாங்க இருதயமும், 13ம் நூற்றாண்டில் சாரங்கதார சங்கதையும், 16ம் நூற்றாண்டில் பாவபிரகாசமும் எழுதப்பட்டன. சசுதுரரும், தன்வந்திரியும் சமகாலத்தவர் அல்லர். இதுபோல் சித்த ஆயுர்வேத மருத்துவ நூற்களின் ஆசிரியர் காலம் இரண்டு மருத்துவ முறைகளிலும். பல நூற்றாண்டுகள் இடைவெளியில் காணப்படுகின்றன. ஆக இரண்டு மருத்துவ முறைகளும் ஒரே காலத்தில் தொகுக்கப்பட்டவை அல்ல.

[31] சித்த மருத்துவ வரலாற்றில் முதல் சித்தனான சிவனின் தலைமையில் இயங்கிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரின் வரலாற்றில் முதல் இடை மற்றும் கடைச் சங்கங்களில் உள்ள அகத்தியர் வரலாற்றில் உள்ள ஏராளமான குழப்பங்கள் போல் ஆயுர்வேத மருத்துவத்திலும் கி.பி. 1ம் நூற்றாண்டில் வேத நூல்கள் தோன்றியிருந்தாலும் ஆனால் அதற்கு முன்பே 700 ஆண்டுகளுக்கு முன்பே, கி.மு. 6ம் நூற்றாண்டில் ஆயுர்வேதம் தோன்றியது என்பதும், சரகரின் காலம் 3000 ஆண்டுகள் என்ற வழக்கும், கி.மு. 8 முதல் கி.பி. 10ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த ஆயுர்வேத மருத்துவமானது, கி.மு. 15ம் நூற்றாண்டில் அதர்வணவேதத்திலும், பூதா நாசங்களால் நோய்கள் எற்படும் என்றும் அவற்றை மந்திரங்கள் மூலம் நீக்கியதாகவும் கூறப்படுவதன் மூலம் சித்த, ஆயுர்வேத ஆகிய இரண்டு மருத்துவ முறைகளில் உள்ள பல்வேறு வரலாற்று குளறுபடிகள் தெரியவரும்.

[32] அகத்தியர் குணவாகடம் நூலில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அறுவை கருவிகள், பிரசவ முறைகள் அதற்கு பயன்படும் மருந்துகள் பற்றிய காலம், சித்த மருத்துவத்தில் உள்ள இடைச்செருகல் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. 5ம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை பற்றி சொல்லிய சுசுருதர் 121 வகை அறுவை கருவிகளை கூறியிருந்தாலும் 1120 நோய்களை பற்றி சொல்லியிருந்தாலும், கொசு மற்றும் எலிகளால் தோன்றும் மலேரியா, லெப்டோபைரசிஸ் போன்ற குறிகுணங்களுக்கு ஒத்த நோய்களை முன்பே சொல்லியுள்ளது மருத்துவ முறைகளின் இடைச்செருகல் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

[33] சித்த மருத்துவத்தில் மருந்து செய்முறை அறிவியல் படி ஒரு மருந்து கிடைக்காவிட்டால் அதற்கு மாற்றாக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வைப்பு சரக்குகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. தங்கம், வெள்ளி, ரசம், லிங்கம், வீரம், பூரம், தாளகம், வெள்ளைப்பாடாணம், அபினி,கஞ்சா, கோரோசனை, சாம்பிராணி என நூறுக்கும் மேற்பட்ட ஏராளமான சரக்கு வைப்பு முறைகள் (synthetic compounds) குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேதாவில் வைப்பு முறைகள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஆனால் அதற்கு பதிலாக ஏராளமான மாற்று சரக்குகள் பற்றிய (alternate compounds) குறிப்புகள் காணப்படுகின்றன.

[34] சித்த மருத்துவத்தில் யோகத்தில் மிகக் குறைந்த அளவே ஆசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பிராணாயாமம், தியானம், சமாதி, குண்டலினி பயிற்சி என அதி நுண்ணிய நுட்பமான ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தில் ஏராளமான ஆசன முறைகள் மிகச் சிறப்பாக விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பிராணாயமும் தியானம் சமாதி பற்றிய நுண்ணிய குறிப்புகள் காணப்படவில்லை.

[35] சித்த மருத்துவத்தில் தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக‌ மாற்றும் ரசவாதம் பற்றிய குறிப்புகள் மூலமாக ஈயம், இரும்பு, செம்பு ஆகியவற்றை வெள்ளி, தங்கம் ஆகியவற்றை செய்யும் ரசவாதம் ஏராளமான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஆயுர்வேத மருத்துவ நூற்களில் ரசவாதம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.

[36] சித்த மருத்துவத்தில் அங்க அறிவியல் (Dissection) மற்றும் அறுவை சிகிச்சை (Surgey) பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படவில்லை. போகர் திரணாக்கியருக்கு செய்த மண்டையோடு அறுவை சிகிச்சை மட்டுமே போகர் நூற்களில் ஆதாரமாக உள்ளன. ஆனால் ஆயுர்வேதத்தில் அங்கசாத்திரமும் சுஸ்ருதரின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையும் மிகச் சிறப்பான முறையில் நவீன மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் தீர ஆராயும் பொழுது எந்த ஒரு மருத்துவ முறையும் காலத்தால் முந்தியது என அறிவித்து கூற முடியாது. அதுபோல் ஒரு மருத்துவ முறையை விட மற்ற மருத்துவ முறை உயர்வானது தாழ்வானது என கூற முடியாது. அது மட்டும் இன்றி உலகெங்கிலும் உள்ள பல மருத்துவ முறைகள் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. வாத பித்த கபம், உடல் தாதுக்கள், சிறுநீர் பரிசோதனை, உலோக உப்பு கார அமில மருந்துகள் என உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில், அனைத்து மருத்துவ முறைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது என்பதை ஏற்ற இறக்கமின்றி காழ்ப்புணர்ச்சி இன்றி இனம், மொழி, மதம், நாடு பெருமை சாராமல் நடுநிலையுடன் ஆராய்ச்சி செய்தால்தான் அறிந்து கொள்ள முடியும். ஆம். தமிழ் மருத்துவம் என்றும் காலத்தால் அழியாது.

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
- திருவள்ளுவர்

ஏழாம் சித்த மருத்துவ தினம் 30 டிசம்பர் 2023. இன்னும் 29 நாட்கள் உள்ளன.
POSTED: 7/1/2018, 9:48 amPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum